திட்டமிட்டபடி நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி 1- முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.;

Update: 2021-10-02 06:45 GMT

 உப்பு சத்தியாக்கிரகம் நினைவுத் தூணில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று காலை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாக்கிரகம் நினைவுத் தூணில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் சிவராசு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து காந்தி பிறந்த நாள் மற்றும் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மராத்தான் ஓட்டத்தினை கலெக்டர் சிவராசு தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, நவம்பர் 1-ஆம் தேதி முதல், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை அறிக்கையாக அளித்திருந்தனர்.  இது குறித்து முதல்வர் கூறுகையில், இது குழந்தைகள் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம். மருத்துவக் குழுவினர் என்ன சொல்கிறார்களோ அதை நாம் முழுமையாக கடைப்பிடிப்போம் என்று  கூறினார். அந்த வகையில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

Tags:    

Similar News