தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காட்டில் பனிப்பொழிவு பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது. மலைகளில் மேகமூட்டம் படர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.;

Update: 2023-10-24 08:46 GMT

ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் 

ஏற்காடு கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத் தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி சனிக்கிழமை, 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களுடன் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, இன்று விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறையானதால் சனிக்கிழமை முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

வழக்கத்தை விட இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். காலையில் இருந்தே கார், மோட்டார் சைக்கிள், சொகுசு வேன், பேருந்துகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

ஏற்காட்டில் பனிப்பொழிவு பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது. மேலும் மலைகளில் மேகமூட்டம் படர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர். குறிப்பாக ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரி இயற்கையாக அமைந்துள்ள ஏரி ஆகும். இதைச்சுற்றிலும், மான் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணாபூங்கா போன்றவைகளால் சூழப்பட்டுள்ளது.

இங்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்தனர். படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சவாரி செய்தனர்.

ஏரிக்கு அருகில் உள்ள அண்ணா பூங்காவில் அழகு செடிகள், வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகமாக விளையாடினர்..

இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படுகின்ற தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் செடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் இயற்கையாகவே காட்சித்தளங்களாக அமைந்துள்ள லேடிஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட் பாறைகளில் நின்று சேலம் நகரத்தின் அழகை கண்டு ரசித்தனர்.

ஏற்காட்டின் கிழக்கு முனையில்அமைந்துள்ள பகோடா காட்சி முனை பிரமிட் பாய்ன்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் கோவில் ஒன்றுள்ளது. இங்கிருந்து அயோத்தியாபட்டணம் பகுதிகளை கண்டுகளித்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கடைகளில் வியாபாரம் களை கட்டியது. பனி மூட்டம், மழை பொழிவு காரணமாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் டீ, பஜ்ஜி வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் ஏற்காடு அண்ணா பூங்கா சாலை, படகு இல்ல சாலை, மற்றும் ஒண்டிக்கடை பகுதிகள் ஸ்தம்பித்தது.

Tags:    

Similar News