இன்றுடன் நிறைவு பெறும் ஏற்காடு கோடை விழா
Salem News Today: சேலத்தை அடுத்த ஏற்காட்டில் 46-வது கோடைவிழா இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
Salem News Today: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் உள்ள முக்கிய மலை வாசஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு கடந்த ஒரு வாரமாக கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மலர் கண்காட்சி மற்றும் இயற்கை அழகு காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், ஏற்காட்டில் 46-வது கோடைவிழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நேற்று செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது.
இந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில் கிளி, பறவைகள், பூனைகள் மற்றும் அல்சேசன், பொமரேனியன், ஜெர்மன் செப்பார்டு, டாபர்மேன், லேபர்டார், பக், புல்டாக், பாக்சர், காக்கர் ஸ்பேனில் டேசன்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை போன்ற நாட்டின வகை நாய்களும் கலந்துகொணடன. இதில் காவல்துறையைச் சார்ந்த நாய்களுக்கான கீழ்படிதல், சாகச காட்சிகள் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
பின்னர் அங்கிருந்த குழந்தைகளிடம் போலீஸ் துறை மோப்ப நாய்கள் விளையாட்டு காட்டின. காண்போர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீஸ் வளர்ப்பு நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கிடையே வளர்ப்பவரின் சொல்லுக்கு கீழ்படியும் செல்லப்பிரா ணிகளில் முதல் 3 இடங்களை பிடித்த வளர்ப்பு நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் புல்லிகுட்டா இன வகை நாய் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
செல்லப்பிராணி கண்காட்சி மற்றும் கோடை விழாவை காண நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அண்ணா பூங்கா சாலை, படகு இல்ல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் நேற்று முழுவதும் மழை இல்லாததால் சாலையோர கடைகள், ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. கோடை விழா இன்றுடன் நிறைவு பெறுவதையொட்டி மாலையில் இதற்கான விழா நடைபெற உள்ளது.