மே 3வது வாரத்தில் ஏற்காடு கோடை விழா, மலர் கண்காட்சி..

Yercaud Summer Festival 2023-46-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 2023 -மே மாதம் மூன்றாவது வாரத்தில் மிகச்சிறப்பாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2023-05-11 01:46 GMT

Yercaud Summer Festival 2023

Yercaud Summer Festival 2023-சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 46-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  கார்மேகம் தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் பேசிய மாவட்ட ஆட்சியர், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை மே மாதம் மூன்றாவது வாரத்தில் மிகச்சிறப்பாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  ஏற்காடு கோடைவிழாவினை அமைச்சர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள ஏற்காடு கோடை விழா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது.மேலும், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

மேலும், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடைவிழா நடைபெறும் நாட்களில் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபாடி, கயறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெறவுள்ள கோடைவிழாவிற்கு சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் வருகைதந்து சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.சிவகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி)  சங்கீத் பல்வந்த் வாகி, வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்ட அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News