கருணை கொலைக்கு அனுமதி கோரிய இளம்பெண்ணால் பரபரப்பு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளம்பெண் ஒருவர் கருணை கொலைக்கு அனுமதி கேட்டு மனு அளிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டியை சேர்ந்த ராஜா மனைவி அமுலு (வயது 36). இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் வைத்திருந்த மனுவை பெற்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அமுலு ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி கிராமத்தில் ஒன்றரை சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிறிய அட்டை போட்ட வீடு கட்டி வசித்து வருகிறார்.
இரு குழந்தைகள் உள்ள நிலையில், தனி நபர்கள் சிலர் அந்த வீட்டில் குடியிருக்க விடாமல் தொடர்ந்து காலி செய்ய வேண்டும் என இடையூறு செய்து வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தனிநபர்கள் தூண்டுதலின் பேரில் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுவதாகவும், ஒன்றரை சென்ட் நிலத்தில் கூட வாழ்வதற்கு வழி இல்லாமல் இருப்பதால், கருணை கொலைக்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க வந்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் போலீசார் அழைத்து வந்து மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஆட்சியரிடம் மனு அளிக்க வழிவகை செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.