மகனின் சித்தரவதை.. சுத்தியலால் அடித்தே கொன்ற முதியவர்
Salem News Today: சேலம் அருகே நிலத்தகராறில் மகனை சுத்தியலால் அடித்துக்கொன்று முதியவர் போலீசில் சரணடைந்தார்.
Salem News Today: சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த நடுவலூர் ஊராட்சி பள்ளக்காடு நடுவீதியில் வசித்து வந்தவர் வையாபுரி (வயது 81). இவருக்கு துரைராஜ் (60) என்ற மகன் உள்ளார். வையாபுரி, தனது மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வையாபுரிக்கும் மகனுக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் துரைராஜ் மனைவி மல்லிகா, தன்னுடைய மகன், மருமகளுடன் தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையம் கோவில் நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டனர்.
எனவே வையாபுரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது மகன் துரைராஜ், அன்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நிலப்பிரச்சினை தொடர்பாக தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கிடையே தாக்குதல் நடைபெற்றுள்ளது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய துரைராஜ் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் உள்ள கட்டிலில் படுத்து துரைராஜ் தூங்கியுள்ளார்.
ஆனால் விடிய விடிய தூக்காமல் வேதனையில் இருந்த வையாபுரி, அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து, தூங்கிக் கொண்டிருந்த மகனின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துரைராஜ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே போலீசில் சரணடைய முடிவு செய்து, அதிகாலை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெங்கவல்லி போலீஸ் நிலையத்துக்கு நடந்தே சென்று சரணடைந்தார்.
அப்போது நடந்த விவரங்களை போலீசாரிடம் கூறினார். உடனே போலீசார் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்து துரைராஜ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வையாபுரியிடம் நடத்திய விசாரணையில், எனக்கு 81 வயதாகிறது. என்னுடைய மகன் துரைராஜ் வீட்டில் தரும் சாப்பாட்டை சாப்பிட்டு வாழ்ந்து வந்தேன். எனது பெயரில் 3 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை எழுதி தருமாறு துரைராஜ் என்னிடம் கேட்டு வந்தான். நான் இறந்த பிறகு அந்த இடம் உனக்கே வந்து விடும் என்று கூறி வந்தேன். அப்படி இருந்தும் தினமும் மது குடித்து விட்டு வந்து என்னை தாக்கி சித்ரவதை செய்து வந்தான். அவனது கொடுமையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நேற்று (நேற்று முன்தினம்) இரவு என்னை சரமாரியாக தாக்கி விட்டு மதுபோதையில் அவன் தூங்கி விட்டான். விடிய விடிய தூக்கம் இல்லாமல் கண்ணீருடன் நான் தவித்தேன். எனவே அவன் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து அவனது தலையில் அடித்து கொலை செய்து விட்டேன் என்று கண்ணீருடன் வையாபுரி போலீசில் கூறியுள்ளார். கெங்கவல்லி அருகே 3 சென்ட் நிலப்பிரச்சினையில் 60 வயது மகனை சுத்தியலால் அடித்துக் கொன்ற 81 வயது முதியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.