ஊராட்சித் தலைவி உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

அயோத்தியாப்பட்டணம் அருகே ஊராட்சித் தலைவி உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-04-09 08:13 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த பள்ளிப்பட்டியில் வசித்து வருபவர் அலமேலு (வயது 40). இவர், தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளிப்பட்டி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்தேன். ஊராட்சி நிதியில் ரூ. 2 கோடி மோசடி செய்துவிட்டதாக கூறி என் மீது கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.

இதனையடுத்து வீராணம் போலீசார் நடத்திய விசாரணையில், என் மீது பொய் புகார் கூறியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவரை அழைத்து போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் பட்டியலின சமூகத்தை சேர்ந்த என்னை அவமானப்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இ்வ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சரவணக்குமரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சேலம் மாவட்ட கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தலைமையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று காலை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அலமேலு மீது பொய் புகார் கூறியதாக பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி ரோசினி மற்றும் அவரது உறவினர் கிருஷ்ணன் ஆகியோர் மீது சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ. 2 கோடி மோசடி செய்ததாக பெண் மீது பொய் புகார் கொடுத்ததாக பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது ஊரக வளர்ச்சித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News