உதவி பேராசிரியர் மீது பணி ஒழுங்கு நடவடிக்கை
பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் உதவி பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை துவங்க கோரிக்கை;
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர் வைத்தியநாதன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழகத்தில் தற்போது 55க்கும் மேற்பட்ட தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு நடவடிக்கை மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது. பல்கலை மானியக் குழு மற்றும் அரசின் அரசாணைப்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விரைவில் நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதவி பேராசிரியர் வைத்தியநாதன் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான அவதூறுகளை பொது வெளியில் பரப்பி வருவதாக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. வகுப்பறையில் ஒழுங்கீனமான நடவடிக்கை மற்றும் மாணவர்களிடம் பண்பற்ற முறையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட காரணங்களால் வைத்தியநாதன் மீது ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நிர்வாகம் எடுத்த தகுதி இறக்க நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகளை திசை திருப்பும் வகையில் அவர் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருவதாக சங்கம் குற்றம்சாட்டுகிறது. பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பெரும்பான்மை ஆசிரியர்களின் நலனுக்கு எதிராகவும் அவர் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர் சங்கம் சார்பில் முதலமைச்சர், தலைமை செயலர், உயர் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. வைத்தியநாதன் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சங்கத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.