வரும்11ம் தேதி தமிழக முதல்வர் வருகை: சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
Salem News Today: சேலம் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகைதரவுள்ளதையொட்டி, நடைபெற்றுவரும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.
Salem News Today: சேலம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகின்ற 11.06.2023 அன்று தமிழக முதல்வர் வருகைதரவுள்ளதையொட்டி, கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் விழா முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று (05.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
வருகின்ற 11.06.2023 அன்று சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்து சேலம், பழைய பேருந்து நிலையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் முதல்வர் திறந்து வைக்க உள்ளார்கள்.
மேலும், சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டடம், சீர்மிகு நகரத் திட்டம், மறு சீரமைப்புப் பணிகள், பள்ளப்பட்டி ஏரி புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய பாலப் பணிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைக்க உள்ளார்கள். இதற்குரிய முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் விழா நடைபெறவுள்ள இடத்தினை ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, 12.06.2023 காலையில் காவிரி டெல்டா பகுதி வேளாண் பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்கள். இவ்வாறு அமைச்சர் திரு. கே.என். நேரு தெரிவித்தார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சி குறித்து மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.