ஏற்காட்டில் நாளை முதல் கோடை விழா, மலர் கண்காட்சி துவக்கம்
ஏற்காட்டில் இந்த ஆண்டுக்கான கோடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இந்த ஆண்டுக்கான கோடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கோடை விழா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது.மேலும், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் சுமார் 10 ஆயிரம் தொட்டியில் சால்வியா, ஜிணியா, கிரை சந்தமம், எஸ்தர், பெட்டுனியா, மெரி கோல்டு, ஆஸ்தம், டேலியா, லில்லியம், கோழிக்கொண்டை, ஆர்கிட் உள்பட 30-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட லில்லி மலர் செடிகள் தற்போது பூத்து குலுங்குகின்றன. கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள டேலியா செடிகள், சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வகையில் சூரியன் போல் பிரகாசமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. 5 லட்சம் கொய் மலர்களை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
மேலும் மலர்களால் ஆன பொன்னியின் செல்வன் கப்பல், டிராகன், ரோபோ, கங்காரு, டோரா, டைனோசர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
செடிகளின் வளர்ச்சி மற்றும் பூக்கள் அதிகமாக பூப்பதற்கு அதிக வெளிச்சம் தேவைப்படுவதால் கூடாரம் அமைத்து, 24 மணி நேரமும் மின் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏற்காடு கோடை விழா, மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை கண்டு ரசிக்க அதிகபடியான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடைவிழா நடைபெறும் நாட்களில் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபாடி, கயறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.