சக்தி பாலிடெக்னிக் கல்லூரி விழா
சக்தி பாலிடெக்னிக் கல்லூரி விழாவில், மாணவா்களுக்கு தனித்திறன் வெளிப்பாடு;
மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிவது ஆசிரியர்களின் கடமை என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், சக்தி நகரில் உள்ள சக்தி பாலிடெக்னிக் கல்லூரியின் 44-ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், ஒவ்வொரு மாணவருக்கும் இயல்பாகவே ஏதாவது ஒரு தனித்திறன் அமைந்திருப்பதாகவும், அதைக் கண்டறியும் திறன் இல்லாத மாணவர்கள் இருப்பார்களே தவிர, தனித்திறன் இல்லாத மாணவர்கள் பெரும்பாலும் இல்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், மாணவர்களுக்குச் சிறப்பாக பாடம் சொல்லித்தந்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல், அவர்களை உற்றுக் கவனித்து அவர்களின் வாழ்நிலை மற்றும் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு ஊக்குவிப்பது இன்றைய தேவையாக உள்ளதாகவும் தெரிவித்தார். வறுமை, கல்விப் பின்புலம் இன்மை, பெற்றோரின் அறியாமை போன்ற பலவகைத் தடைகளையும் தாண்டித்தான் எண்ணற்ற மாணவர்கள் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் புரிந்துள்ளனர் என்றும், மன உறுதி குன்றாமல் தொடர்ச்சியாக தன்னம்பிக்கையுடன் உழைத்து வந்தவர்கள் தான் எதிர்காலத்தில் வெற்றியாளர்களாக உயர்ந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். பட்டதாரிகளை உருவாக்குவது மட்டுமின்றி, நாட்டிற்கு சிறந்த குடிமக்களை, திறமைமிக்க ஆளுமைகளை, தலைமைத்தகுதி மிக்க தலைவர்களை உருவாக்கித் தருதல் கல்வி நிலையங்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். விழாவில் கல்லூரியின் இயக்குநர் கே.ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார், முதல்வர் எஸ்.செந்தில் ஆண்டறிக்கை வாசித்தார், சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.