சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள்
Salem News Today: சமூக ஊடகங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்திகள் பரப்புபவர்களை கண்காணிக்க காவல் துறை மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Salem News Today: சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்களை நலம் விசாரித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம், ஜான்சன்பேட்டையில் குடிசை மாற்று வாரிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் கார் மேகம் நேற்று (04.03.2023) நேரில் சந்தித்து நலம் விசாரித்து கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வரின் அறிவுரையின் படி, சேலம் மாவட்டத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருக்கும் பகுதியில் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா என ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் சேலம், ஜான்சன்பேட்டையில் குடிசை மாற்று வாரிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் பணிபுரிந்து வரும் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 126 வெளிமாநிலத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததில் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். குறிப்பாக வரும் 08.03.2023 அன்று ஹோலி பண்டிகையை கொண்டாட மகிழ்ச்சியுடன் தங்கள் ஊருக்கு சென்றுவர இருப்பதாக தெரிவித்ததையொட்டி, ஹோலிப்பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்ச்சி பகிர்ந்துகொள்ளப்பட்டது.
மேலும், சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களிடம் தாங்கள் பாதுகாப்பாக உள்ளது குறித்து அவர்களின் சொந்த மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், எப்பொழுதும் போல் இயல்பாக அவர்களுக்கு பிடித்தமான சூழ்நிலையில் வசித்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் நலத்துறை மூலம் நடத்தப்பட்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹோலிப்பண்டிகையை முன்னிட்டு சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்பும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக ஹோலி சிறப்பு இரயில் சேவை இயக்கப்படுகிறது. சேலம் ஊரகம் மற்றும் மாநகர காவல் துறை சார்பாக சமூக ஊடகங்களின் மூலம் வதந்திகள் பரப்புபவர்களை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, சேலம் மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், கட்டடப் பணிகள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், சுய தொழில் புரிவோர், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் என சுமார் 12,953 வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டது.
குறிப்பாக, வெளிமாநிலத் தொழிலாளர்கள் சேலம் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொள்ளும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு தற்பொழுது சேலம் மாவட்டத்தில் உதவி ஆட்சியர், பயிற்சியாக பணியாற்றி வரும் திரு.சங்கீத் பல்வந்த் வாகி இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது அலைபேசி எண் 93700 34756 ஆகும். மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரம் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 0427 2450498, 2452202 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகம் உள்ளிட்ட அனைத்து விதமான புகார்களை அளிக்க சேலம் மாநகர காவல் துறையில் 90872 00100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், சேலம் மாவட்ட ஊரக பகுதிகளிலிருந்து 96293 90203 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்புகொண்டு காவல் துறையில் புகார் அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.