விவசாயிகள் கடன் நிலுவை சலுகை வட்டியுடன் செலுத்த சிறப்பு தீர்வு
கூட்டுறவுச் சங்கங்களில் கடன் நிலுவை இனங்களுக்கு அரசு சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் கீழ் சலுகை வட்டியில் கடன்களை திரும்ப செலுத்திப் பயன்பெறலாம்.
கூட்டுறவுச் சங்கங்களில் கடன் நிலுவை இனங்களுக்கு அரசு சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் கீழ் சலுகை வட்டியில் கடன்களை திரும்ப செலுத்திப் பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசாணையில் தெரிவித்துள்ளபடி, சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடன்தாரர்கள் நீண்ட நாட்களாக செலுத்தத் தவறிய பண்ணைசாராக் கடன்கள் மற்றும் இதர நீண்டகால கடன் நிலுவைகளை 9% சலுகை வட்டியில் திரும்பி செலுத்தலாம். அக்கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். எனவே, அரசு அறிவித்துள்ள இச்சிறப்பு கடன் தீர்வுத் திட்டத்தினை பயன்படுத்திக் கொண்டு நிவாரணம் பெறலாம்.
மேலும், சிறுவணிகக்கடன் (Petty Traders Loan), போக்குவரத்துக்கடன் (SRTO), கைத்தறிக்கடன் (Handloom Loan), விசைத்தறி கடன் (Power Loom Loan), தொழிற்கடன், வாணிபக் கடன்கள், பத்திர ஈட்டுக் கடன் (Document Pledge Loan), வீடு கட்டும் கடன் (Housing Loan), வீட்டு அடமானக் கடன் (House Mortgage Loan), 2021ம் ஆண்டில் தள்ளுபடி கிடைக்கப் பெறாத தகுதியான மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள், ஆடவர் சுயஉதவிக்குழு கடன்கள், கூட்டுப் பொறுப்புக்குழு கடன்கள், தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் / விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடமிருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவைகளுக்கு இக்கடன் தீர்வுத் திட்டம் பொருந்தும். 31.12.2022 அன்று கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடு முடிவடைந்து, தவணை தவறி அரசாணை வெளியிடப்பட்ட நாளில் நிலுவையில் உள்ள பண்ணைசாராக் கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். குறிப்பாக, 31.12.2022க்குப் பிறகு கடன் தவணை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு உள்ள பண்ணைசாராக் கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கூட்டுறவுச் சங்கங்களில் தாங்கள் செலுத்த வேண்டிய கடன் நிலுவையில் 25 சதவீத தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து (13.12.2023) மூன்று மாதத்திற்குள் (12.03.2024 தேதிக்குள்) தாங்கள் கடன் பெற்றுள்ள கூட்டுறவுச் சங்கம் அல்லது வங்கியில் செலுத்தி ஒப்பந்தம் மேற்கொண்டு, மீதமுள்ள 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும்.
தகுதியான கடன்தாரர்கள் தாங்கள் கடன் பெற்ற தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொண்ட நாள் முடிய அசலுக்கு 9% சாதாரண வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 22,000 நபர்களுக்கு அவர்களுக்கு செலுத்த வேண்டிய சலுகையுடன் கூடிய கடன் நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கம் / வங்கி வாயிலாக நேரடியாகவும், பதிவு அஞ்சல் வாயிலாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, கடன்தாரர்கள் கூட்டுறவு சங்கங்கள் அல்லது வங்கிகளில் கடன் பெற்று நீண்ட நாட்களாக செலுத்தத் தவறிய பண்ணைசாராக் கடன்கள் மற்றும் இதர நீண்ட கால கடன் நிலுவைகளை சலுகை வட்டியில் திரும்பச் செலுத்தி அரசு அறிவித்துள்ள இச்சிறப்பு கடன் தீர்வுத் திட்டத்தினை பயன்படுத்திக் கொண்டு நிவாரணம் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் சேலம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தினை 0427 2415158 என்ற எண்ணிலும், சேலம் சரக துணைப்பதிவாளர் அலுவலகத்தினை 0427 2452011 என்ற எண்ணிலும், ஆத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகத்தினை 04282 240610 என்ற எண்ணிலும், ஓமலூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகத்தினை 04290 222959 என்ற எண்ணிலும், சங்ககிரி சரக துணைப்பதிவாளர் அலுவலகத்தினை 04283 243600 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.