ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் தனிக் குழு ஆய்வு: சேலம் ஆட்சியர்
Salem News Today- ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் தனிக் குழு ஆய்வு செய்து வருவதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Salem News Today- சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் காவல்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் நடத்தப்பட்டு, கடந்த மாதம் நடைபெற்ற சாலை விபத்துகளின் காரணங்கள் குறித்து ஆராய்ந்து எதிர்வரும் நாள்களில் சாலை விபத்து இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறையினர், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிப் பேருந்துகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் குழந்தைப் பருவம் முதலே சாலை விதிகள் குறித்தும் அவற்றைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆசிரியர்கள் மூலமாக அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் எடுத்துரைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு உதவிடும் வகையில் தேவையான இடங்களில் மின் விளக்குகள், வேகத் தடைகள் மற்றும் சாலைகள் மற்றும் மலைப்பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருப்பதை அலுவலர்கள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்காடு உள்ளிட்ட சாலைகளில் அதிகளவிலான கண்காணிப்பை மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்துகளில் அளவுக்கு அதிகமான பயணிகளையோ, சரக்கு வாகனங்களில் அதிகமான பொருட்களையோ ஏற்றுவதை வாகன உரிமையாளர்கள் முற்றிலும் தவிர்த்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சாலை விபத்தில்லாத சேலம் மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா.சிவகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.