சேலம் மாவட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறப்புத் தூய்மைப் பணிகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறப்புத் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டத்தின்கீழ், சிறப்புத் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தன் சுத்தம், பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தினை உணர்தல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளி காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டத்தின் சிறப்பு செயல்பாடாக இன்று 08.01.2024 முதல் 10.01.2024 வரை சிறப்புப் பள்ளி தூய்மைப் பணி செயல்பாடுகள் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மன்றம், தன்னார்வலர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்புத் தூய்மைப் பணிகளை அனைத்து அரசு பள்ளிகளிலும் சேலம் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்திட அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் குழு செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில், "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டத்தின்கீழ், இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறப்புத் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது.