மாணாக்கர்களுக்கு ஆசிரியர்கள் தனி கவனம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

அரசுப் பொதுத் தேர்விற்குத் தயாராகும் மாணாக்கர்களுக்கு ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-22 13:35 GMT

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் சங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (22.01.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது:

பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஆசிரியர் பணி என்பது சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணி என்பதை நினைவில் கொண்டு அரசுப் பள்ளிகளில் ஆரம்ப நிலையில் இருந்தே குழந்தைகள் சரலமாக தாய்மொழியில் பேசவும், எழுதவும் திறமையுடையவர்களாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மேலும், அரசுப் பொதுத் தேர்விற்குத் தயாராகும் மாணாக்கர்களுக்கு ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் அடிக்கடி பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்திட வேண்டும்.

அதேபோன்று, கல்வி பயிலும் காலங்களிலேயே என்னென்ன வேலைவாய்ப்புகளுக்கு எங்கெல்லாம் அதிக முக்கியத்துவம் உள்ளது என்பது குறித்தும், அதற்கு ஏற்றார் போல் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுவரும் நான் முதல்வன் திட்டத்தால் படிப்பு முடிந்தவுடன் தங்களுக்கான பணிகளை உடனடியாகத் தேர்வு செய்யும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் அடையப்பட்டுள்ள பயன்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களை சென்றுசேரும் வகையில் தொடங்கப்பட்டுள்ள "மக்களுடன் முதல்வர்" திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டத்தில்

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் என 142 இடங்களில் முதற்கட்டமாக 18.12.2023 முதல் 06.01.2024 வரை நடத்தப்பட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது விரைவில் தீர்வுகாணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் வழங்கப்படும் உட்பிரிவு பட்டா உள்ளிட்ட பல்வேறு பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்தும், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் முதல்வரின் முகவரித் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமெனவும், அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று காலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் சேலம் மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சாலை மேம்பாலப் பணியினையும், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் மற்றும் மல்லூரி பேரூராட்சிப் பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.95.52 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் திருமதி பொன்மணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News