சேலம் மாவட்டத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா துவக்கம்
சேலம் மாவட்டத்தில் சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார்.;
சேலம் மாவட்டத்தில் சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார்.
சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, சிறுதானிய உணவுத் திருவிழா மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் தலைமையில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா முன்னிலையில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சமுதாயக் கூடத்தில் இன்று (21.12.2023) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:
உடலுக்கு நன்மை பயக்குகின்ற சிறுதானியங்களை உணவாக பயன்படுத்த 2023-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் இன்று ஒருநாள் சிறுதானிய உணவுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பாரம்பரிய உணவுகள் குறித்து அறிந்துகொள்ளவும், சிறுதானிய வகைகள், உணவு வகைகள் குறித்தும், அவற்றினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அனைவருக்கும் தெரியப்படுத்துவது, இதன்மூலம் ஆரோக்கிய நிலையை மேம்படுத்துவதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்ற வரகு, சாமை, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, பனிவரகு ஆகியவற்றில் தற்போது நாம் பயன்படுத்தும் நெல் மற்றும் கோதுமையில் இருக்கின்ற சத்துக்களைக் காட்டிலும் மிக அதிக அளவில் புரதம், நார், இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற சத்துக்கள் உள்ளன.
இச்சிறுதானிய உணவுத் திருவிழாவில் பொதுமக்களாகிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து வகையான சிறுதானிய வகைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிறுதானியங்களால் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, விநியோகம் மற்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் பேசினார்.
முன்னதாக, சிறுதானியங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள், நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இராஜா, முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.