பாதை கேட்டு ஆடு, மாடுகளுடன் முற்றுகை: ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு
Salem News Today: ஓமலூர் அருகே பாதை கேட்டு ஆடு, மாடுகளுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.;
Salem News Today: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலம் ஒன்றியத்தில் கருக்கல்வாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கரட்டுகாடு பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தினர் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.
இந்நிலையில் கருக்கல்வாடி கிராமத்தின் பிரதான சாலையில் இருந்து குடியிருப்புகளுக்கு செல்லும் மண் சாலை உள்ளது. இந்த சாலையை, அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் மண்ணை கொட்டி செல்லமுடியாமல் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பாதை அடைப்பால் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு குடியிருப்புகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாமல் சரிமப்பட்டு வந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஓமலூர் தாசில்தார், மேட்டூர் உதவி கலெக்டர், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பாதை கேட்டு மனு கொடுத்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆடு, மாடுகளுடன் ஓமலூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலத்தை அளவீடு செய்து பாதை சரிசெய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.