சங்ககிரியில் நாளை மாபெரும் கால்நடை மருத்துவ முகாம்
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சங்ககிரியில் நாளை மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வேலம்மாவலசு கிராமத்தில் வருகின்ற நாளை (18.08.2023) மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி, வேலம்மாவலசு கிராமத்தில் 18.08.2023 அன்று கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், செயற்கைமுறை கரூவூட்டல், சினை ஆய்வு, சினை பருவ ஒருங்கிணைப்பு, மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கால்நடை நோய்புலானாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள், சாணம், ரத்தம், சளி, பால் ஆகியவற்றை ஆய்வு செய்யப்படவுள்ளது.
கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி மற்றும் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் போடப்படவுள்ளது. கன்றுகள் பேரணியும் நடைபெறவுள்ளது. சிறந்த கன்றுகள், சிறந்த கால்நடை வளர்ப்பு மற்றும் மேலாண்மை செய்யும் விவசாயிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. கால்நடை வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை குறித்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துறை வல்லுநர்களால் விவசாயிகளுக்கு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
எனவே வேலம்மாவலசு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தில் வசிக்கும் கால்நடை வளர்ப்போர் முகாமிற்கு தங்களது கால்நடைகளை பெருமளவில் கொண்டு வந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.