சேலம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.3.90 கோடி கதர் விற்பனை இலக்கு
சேலம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கு ரூ.3.90 கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.;
சேலம், திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள அண்ணா பட்டு மாளிகையில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் கதர்-கிராமத் தொழில்கள் (காதி கிராப்ட்) சார்பில் உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (02.10.2023) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சிர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கதர் பொருட்களைப் பார்வையிட்டு, தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையினைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும், தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்க்கையினையே முழுமையாக அர்ப்பணித்த மகாத்மாவின் நினைவுகளைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 2-ஆம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சேலம் மாவட்டத்திற்கு 2023-24-ஆம் ஆண்டிற்கு ரூ.3.90 கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் ரூ.1.76 கோடி மதிப்பிற்கு கதர் இரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே நடப்பாண்டிற்கும் மாநில அரசு மற்றும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவினரால் இவ்வாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பட்டு மற்றும் பாலியஸ்டர்களுக்கு 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கிராமப்புற மகளிரின் மேம்பாட்டு நலனைக் கருதியும், சிறு தொழில் வல்லுநர்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையிலும் மாநில அரசும், கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் வழங்கியுள்ள மாபெரும் தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்திட கதர் இரகங்கள் அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சிர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, கதர் – கிராமத் தொழில்கள் நிறுவனத்தின் உதவி இயக்குநர் சந்திரசேகரன், மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.