இந்து சமய அறநிலையத்துறை (inspector) ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கக் கோரிக்கை
ஆய்வாளர்கள் அனைவருக்கும் மோட்டார் பைக் அல்லது ஸ்கூட்டி உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை விலையின்றி வழங்கினால் அவர்களது பணிகளை எளிதாகவும் தாமதமின்றி மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றிவரும் கோயில் ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க வேண்டுமென கோவில் பூசாரிகள் நலச்சங்கம் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத்தலைவர் பி .வாசு பூசாரி, தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்:
தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 40,000 திருக்கோவில்கள் உள்ளன. இதுதவிர இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு லட்சம் திருக்கோவில்கள் உள்ளன. இந்த திருக்கோவில்கள் தொடர்பான பிரச்னைகளில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தாலுகா வாரியாக இந்து சமய அறநிலையத்துறையின் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆய்வாளர்கள், திருக்கோவில் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், திருக்கோவில்கள் தொடர்பான இதர பணிகளுக்காகவும் சம்பந்தப்பட்ட இடம் மற்றும் கோவில்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. களப்பணி செய்ய வேண்டிய ஒரு சில பகுதிகளில் பேருந்து வசதி இல்லாத பகுதியாகவும் அமைந்துள்ளது. இதனால் அங்கு செல்வதில் காலதாமதமும் களப் பணியில் தொய்வும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.
எனவே, இப்பிரச்னையை கருத்தில்கொண்டு ஆய்வாளர்கள் அனைவருக்கும் மோட்டார் பைக் அல்லது ஸ்கூட்டி உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை விலையின்றி வழங்கினால் அவர்களது பணிகளை எளிதாகவும் தாமதமின்றி மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும்.
ஒவ்வொரு தாலுகாவில் துறை கட்டுப்பாட்டிலும் மற்றும் கட்டுப்பாட்டில் இல்லாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோவில்கள் உள்ளன. இந்த திருக்கோவில்களில் பூசாரிகள் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் இதர பணியாளர்கள் தொடர்பான பிரச்னைகள் மற்றும் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலபுலன்கள் உள்ளிட்ட விஷயங்களை கள ஆய்வு செய்யவேண்டிய பெரும் பொறுப்பு ஆய்வாளர்களுக்கு இருந்துவருகிறது.
ஒரு ஆய்வாளர் தனது அதிகார வரம்புக்கு உள்பட்ட ஏராளமான திருக்கோவில்கள் தொடர்பான கள ஆய்வுப் பணிக்கு அவ்வப்போது செல்ல செல்ல வேண்டியது அவசியமாகும். வாகன வசதி இல்லாத காரணத்தால் ஆய்வுப் பணியும் களப்பணியும் மேற்கொள்வது ஆய்வாளர்களுக்கு தற்போது சிரமமாக இருந்து வருகிறது .
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தற்போது திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக எண்ணற்ற மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த பெரும் முனைப்பு காட்டி வருகிறார். ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ள ஏராளமான திருக்கோவில் நிலங்களை மீட்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்து சமய அறநிலை துறை அமைச்சரின் ஆக்கபூர்வமான செயல் திட்டங்களுக்கு உறுதுணையாக செயல்படவேண்டிய பெரும் பொறுப்பு ஆய்வாளர்களுக்கு இருந்துவருகிறது.
எனவே ஆய்வாளர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனங்களை விலையின்றி வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்களைப் பெறுவதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆய்வாளர்கள் களப்பணி ஆற்றி இந்து சமய அறநிலையத்துறையின் மேன்மைக்கும் திருக்கோவில்களின் வருவாய் பெருகுவதற்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பது நிச்சயம்,மேலும் பெரும்பாலான இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் (inspector) அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது இந்த அலுவலகங்கள் அரசு சார்பில் சொந்த கட்டிடத்தில் இயங்க புதிதாக காட்டிக்கொடுக்க வேண்டும் என்பது கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின்சார்பில் வேண்டுகிறோம்.