சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.23 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2023-03-20 13:20 GMT

சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று  நடைபெற்றது.

பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிதததாவது:

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 274 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 55 மனுக்கள் வரப்பெற்றன.

முன்னதாக, 16.03.2023 அன்று மேட்டூர் வட்டம், கீரைக்காரனூர் ஊராட்சியில் ஆய்வு பணிக்கு சென்ற போது அங்கிருந்த ஒருகால் முழுவதும் இல்லாத மாற்றுத்திறனாளி குஞ்சுப்பையன் என்பவரிடம் ஏதேனும் அரசின் சார்பில் உதவிகள் தேவையா என கேட்டறியப்பட்டது. அப்போது தனக்கு நவீன செயற்கைகால் வேண்டுமென தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 17.03.2023 அன்று அவரை அரசின் சார்பில் கோவைக்கு அழைத்துத் சென்று நவீன செயற்கைகால் செய்திடும் நிறுவனத்தில் அவரது காலுக்குரிய அளவுகளை எடுக்கச் செய்து ரூ.1.85 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கைகால் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

மேலும், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,900/- மதிப்பிலான சிறப்பு வகை சக்கர நாற்காலிகளும், இது தவிர 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.750/- மதிப்பிலான ஊன்றுகோல்கள் உடனடியாக வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,050/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களும், 8 மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,900/- மதிப்பிலான சிறப்பு வகை சக்கர நாற்காலிகளும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.6,880/- மதிப்பிலான தையல் இயந்திரமும், என மொத்தம் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.22 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்ப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News