சேலம் மாவட்டம்; தாசில்தார் அலுவலகங்களில் 16 முதல் 24 வரை ஜமாபந்தி
Salem News,Salem News Today-சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும், வரும் 16ம் தேதி முதல், 24ம் தேதி வரை, வருவாய் தீர்வாயங்கள் (ஜமாபந்தி) நடக்கிறது.
Salem News,Salem News Today- சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் வரும் 16ம் தேதி முதல், 24ம் தேதி வரை வருவாய் தீர்வாயங்கள் (ஜமாபந்தி) நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளுக்கு, மனுக்கள் வழங்கி சான்றுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருவாய் கிராமத்தில், ஒரு ஆண்டில் பெறப்பட்ட வருவாய் இனங்களான நிலவரி, தண்ணீர்வரி, கூடுதல் தண்ணீர் வரி, B மெமொ வரி, மீன் வள வாடகை, விற்பனை மற்றும் 2C பட்டா மர வரி மற்றும் இதர கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பசலியின் இறுதிக்குள் சமர்பிக்க ஜமாபந்தி முறை முன்னுரிமை தருகிறது.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் வரும் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஜமாபந்தி நடக்க உள்ளது. இந்த ஜமாபந்தியில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, ஆதரவற்ற விதவை சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குறு விவசாயி சான்று மற்றும் இதர மனுக்களையும் விண்ணப்பித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியிருப்பது,
சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களிலும் ஜமாபந்தி நடக்கிறது. சங்ககிரி தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையும், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி. எ) தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் கவிதா தலைமையில் வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும், முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) நர்மதாதேவி தலைமையில் காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் 16, 17ம் தேதிகளில் ஜமாபந்தி நடக்க உள்ளது.
மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் தலைமையில் மேட்டூர் தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையும், 23, 24ம் தேதிகளிலும், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா தலைமையில் கெங்கவல்லி தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், உதவி ஆணையர் (கலால்) மாறன் தலைமையில் சேலம் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், தனித்துணை ஆட்சியர் (ச. பா. தி) மயில் தலைமையில் தலைவாசல் தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமையில் ஓமலூர் தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடக்க உள்ளது.
தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) துரைமுருகன் தலைமையில் சேலம் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 19ம் தேதி, 23ம் தேதி ஆகிய நாட்களிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன் தலைமையில் சேலம் தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் ஏற்காடு தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், துணை ஆட்சியர்/ மண்டல அலுவலர் (பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிட்) அமுதன் தலைமையில் எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், துணை ஆட்சியர்/ மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு அலுவலர் ராஜன் தலைமையில் ஆத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் 16, 17ம் தேதிகளில் நடைபெறவுள்ள வருவாய் தீர்வாயங்களுக்கு ஜமாபந்தி அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.