சேலம் சரகத்தில் விதிமீறிய வாகனங்கள்; ரூ. 63 லட்சம் வசூலித்த அதிகாரிகள்
Salem News,Salem News Today-சேலம் சரகத்தில், விதிமுறைகளை மீறி இயக்கிய 1,557 வாகனங்களுக்கு, ரூ.63 லட்சம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வசூலித்துள்ளனர்.
Salem News,Salem News Today- சேலம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி அவர்கள் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பர்மிட்டுடன் இயக்கப்படுகிறதா? என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த மாதத்தில் அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும், விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது, விதிமுறைகளை மீறி இயக்கிய 1,557 வாகனங்களிடம் இருந்து ரூ.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 56 லாரிகள், 20 ஆட்டோக்கள் உள்பட 143 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர, கடந்த மாதத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 31 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் கவனத்துக்கு;
பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது குடிபோதையில் வாகனம் இயக்குவது, அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குவது, வாகனத்தை இயக்க தெரியாமல், இயக்குவது, சாலை விதிமுறைகள் பற்றி தெரியாமல் வாகனம் இயக்குவது, முறையான பராமரிப்பில்லாத வாகனங்களால் திடீரென ஏற்படும் விபத்து, நெரிசலான பகுதிகளில், பழுதடைந்த ரோடுகளில் வாகனத்தை வேகமாக இயக்குவது என்பன உட்பட பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இதுபற்றிய விதிமீறல்களுக்கும் கடுமையான அபராதம் விதிப்பதும் மிக முக்கியம்.