சேலம்; சங்ககிரியில், 17.5 செ.மீ., மழை
Salem News,Salem News Today-சேலம் மாவட்டத்தில், பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக சங்ககிரியில் 17.5 செ.மீ., மழை பதிவானது.
Salem News,Salem News Today- சேலம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக சங்ககிரியில் 17.5 செ.மீ., மழை பதிவானது. பள்ளிக்கூட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, சேதமடைந்தது.
தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வளிமண்டலத்தின் கீழடுக்களில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சேலம் மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய நீடித்த மழையால் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம், கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.. மேலும் சில இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடியதால் அதில் தேங்கியிருந்த பொருட்கள் சாலையில் சிதறி கிடந்தன. காலையில் மாநகராட்சி ஊழியர்கள் அதை அள்ளி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாநகரில் சில சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தன. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை கடப்பதற்குள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
சேலம் சூரமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான சுற்றுச்சுவர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள சிலரது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
சங்ககிரி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை 4.45 மணிமுதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. குறிப்பாக சங்ககிரி பகுதியில் 17.5 செ.மீ., (175 மில்லி மீட்டர்) மழை பதிவானது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் இந்த கனமழையினால் சங்ககிரி நடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் 100 மீட்டர் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தனியாருக்கு சொந்தமான சைக்கிள் ஸ்டாண்டில் நேற்று இரவு பெய்த கனமழையினால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 10 மோட்டார் பைக்குகள், அருகில் இருந்த கிணற்றில் விழுந்து விட்டன. இதுகுறித்து சங்ககிரி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த வாகனங்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் சங்ககிரி குண்டாச்சிகாடு அருந்ததியர் தெருவில் வசிக்கும் கந்தசாமி (67) என்பவருடைய வீடு மழைக்கு முற்றிலும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் மற்றும் பொம்மக்காடு ஆகிய பகுதிகளில் இருந்த மின்கம்பங்கள் சரிந்து கீழே விழுந்தன. மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி முதல் ஏற்காடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு தான் மின்சார வினியோகம் சீரடைந்தது.
ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சென்னகிரி பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கூலித்தொழிலாளி பாலகிருஷ்ணன் (வயது 51) என்பவர் தன்னுடைய மகள் சுப்ரிதா (18) என்பவருடன் வசித்து வருகிறார். சுமார் 50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் அவர்கள் வசித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் கனமழை பெய்தது. அப்போது நள்ளிரவு 1:30 மணியளவில் பாலகிருஷ்ணன் வீட்டின் ஒரு பகுதி முழுவதுமாக பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. மற்றொரு பகுதியில் இருவரும் துாங்கி கொண்டிருந்தால் சத்தம் கேட்டு அலறி அடித்து, வீட்டை விட்டு வெளியில் ஓடிவந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக தந்தை-மகள் இருவருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மழையால் இடிந்து விழுந்த வீட்டை வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர் நேரில் பார்வையிட்டனர்.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில், அதிகபட்சமாக சங்ககிரியில் 17.5 செ.மீ., மழை பதிவானது.
மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு;
எடப்பாடி-122, தம்மம்பட்டி-88, ஓமலூர்-70.6, ஆனைமடுவு-61, வீரகனூர்-45, மேட்டூர்-44.8, ஏற்காடு-43.4, சேலம்-42.4, கரியகோவில்-18, கெங்கவல்லி-17, தலைவாசல்-9, ஆத்தூர்-8.2, பெத்தநாயக்கன்பாளையம்-8, காடையாம்பட்டி-5. கோடை வெப்பத்தால் அவதியடைந்த மக்கள், இந்த கனமழையினால் மகிழ்ச்சி அடைந்தனர். சேலத்தில் நேற்று காலை முதல் மழை இல்லை. ஆனால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.