காயமடைந்த பிராணிகளை பாதுகாக்க நடவடிக்கை; கலெக்டர் தகவல்
Salem News,Salem News Today-சேலம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட, காயமடைந்த பிராணிகளை தனி இடம் தேர்வு செய்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Salem News,Salem News Today- சேலம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட, காயமடைந்த பிராணிகளை தனி இடம் தேர்வு செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒருங்கிணைந்து பிராணிகளை பாதுகாப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது,
சேலம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட, காயமடைந்த பிராணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சங்க நிர்வாகக்குழுவுடன் இணைந்து தனி இடத்தை தேர்வு செய்து அங்கு பிராணிகளை பாதுகாத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட பிராணிகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பிராணிகளை பத்திரமாக பாதுகாத்திடும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, விலங்குகளை கொல்வது, துன்புறுத்துவது, வளர்ப்பு பிராணிகளை ஆதரவின்றி விட்டுச் செல்வது போன்றவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, பொறி வைத்து பிடிப்பதும் கடும் தண்டனைக்குரியது. கரடி, குரங்கு, சிறுத்தை, சிங்கம், புலி, மாடு போன்ற விலங்குகளை கேளிக்கைக்காக பயன்படுத்துவதும் குற்றமாகும். வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்காமல் இருப்பதும், அவைகளை ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக அடைத்து வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். மேலும், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை சீண்டுவது, துன்புறுத்துவது அவற்றிற்கு உடல் நலத்தை பாதிக்கும் வகையில் உணவு அளிப்பது குற்றமாகும். பிராணிகளை பாதுகாப்பதில் நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) தமிழரசி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாபு, பிராணிகள் வதை தடுப்புச் சங்க நிர்வாகக்குழு துணைத்தலைவர் எஸ்.ஆர்.சவுந்தரராஜன், செயலாளர் எஸ்.பெருமாள் மற்றும் குழு உறுப்பினர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் வீணா குருபதான், வித்யா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.