சேலம் புதிய பேருந்து நிலையம் அமைதிப் பேருந்து நிலையமாக அறிவிப்பு
சேலம் புத்தகத் திருவிழா நடைபெறும் புதிய பேருந்து நிலையம் ஒலிப்பான்களுக்கு 21.11.2023 முதல் 03.12.2023 வரை தடைசெய்யப்பட்டு அமைதிப் பேருந்து நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் 21.11.2023 முதல் 03.12.2023 வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ளதைத் தொடர்ந்து, விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று (20.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், இந்த புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 21.11.2023 முதல் 03.12.2023 வரை புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நாளை 21.11.2023 தொடங்கி வைக்க உள்ளார். இவ்விழாவில் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
சேலம் புத்தகத் திருவிழா நாள்தோறும் காலை 10.00 மணிக்கு தொடங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் 250 அரங்குகள் அமைக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு உள்ளூர் கலை வடிவங்களான நாட்டுப்புற கலை, தெருக்கூத்து, பறை, தப்பு உள்ளிட்டவைகளும் இடம்பெறுகிறது.
இப்புத்தகக் கண்காட்சியில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுவதோடு, சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட புத்தக தொகுப்புகளும் இடம்பெறவுள்ளன.
புத்தகக் கண்காட்சி அரங்கத்தின் பின் பகுதியில் உணவக வசதி மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புத்தகக் கண்காட்சியினை பார்வையிட வருகைபுரிபவர்களுக்கு குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இப்புத்தகக் கண்காட்சி நடைபெறும் 21.11.2023 முதல் 03.12.2023 வரை அனைத்து நாள்களிலும் சேலம், புதிய பேருந்து நிலையம் ஒலிப்பான்களுக்குத் தடைசெய்யப்பட்டு அமைதிப் பேருந்து நிலையமாகவும் மற்றும் 4 ரோடு முதல் 5 ரோடு வரையிலான சாலை அமைதி சாலையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறவுள்ள இம்மாபெரும் புத்தகக் கண்காட்சியில் புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.