டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு சேலம் மேயர் உத்தரவு
சேலம் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்-அதிகாரிகளுக்கு, மேயர் ராமச்சந்திரன் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பருவமழைக்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. நல்ல தண்ணீர் தேங்கும் இடங்களையும், பொருட்களையும் கண்டறிந்து தீவிர கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் ஆணையாளர் பாலச்சந்தர் பேசுகையில், டெங்கு, தொற்று நோய் தடுப்பு பணிக்கு தேவையான மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களில் கொசுக்கள் புகுந்து முட்டை இடாத வண்ணம் முழுமையாக மூடி வைக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் வீடுதோறும் சென்று டயர், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையாளர்கள் சிந்துஜா, கதிரேசன் உள்பட சுகாதார அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.