மாநில அளவில் காசநோய் வில்லைகள் விற்பனையில் சேலம் மாவட்டம் முதலிடம்
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 74-வது தொகுதி காசநோய் வில்லைகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.;
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் காசநோய் வில்லைகளை ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி வெளியிட்டார்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் 74-வது தொகுதி காசநோய் வில்லைகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
மாநில அளவில் காசநோய் வில்லைகள் விற்பனையில் கடந்த 12 வருடங்களாக சேலம் மாவட்ட காசநோய் தடுப்புக் கழகம் முதலிடம் வகித்து வருகிறது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் ரூ.15.03 இலட்சம் மதிப்புள்ள காசநோய் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டு முழு இலக்கு எய்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 73-வது தொகுதி காசநோய் வில்லைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விற்பனை செய்து முழு இலக்கினை அடைந்த சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோருக்கு முதல் பரிசும், உதவி இயக்குநர், நகர்ப்புற ஊரமைப்பு அவர்களுக்கு இரண்டாம் பரிசும், தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு மூன்றாம் பரிசும் இன்றைய தினம் வழங்கப்பட்டது.
நுரையீரல் பாதிப்பு காசநோய் தொற்றுள்ள நபர் இரும்பும் போது காற்றின் மூலமாக அருகில் உள்ள நபருக்கு காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காசநோயாளிகள் இரும்பும் போது கைகுட்டை பயன்படுத்துதல் வேண்டும். குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு முறையாக காசநோய்கான கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக புரத சத்துள்ள ஆரோக்கியமான உணவு வகைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் காசநோயிலிருந்து முழுமையாக குணமடையலாம்.
கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் காசநோய் வில்லைகள் விற்பனைக்கு அனைத்து அலுவலர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட காசநோய் தடுப்புக் கழகத்தின் சார்பில் 74-வது தொகுதி காசநோய் வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொ) ராதிகா, மாநகர துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாபு, திரு.தமிழ்வாணன், துணை இயக்குநர் (காசநோய்) கணபதி, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதிரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.