சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 29.28 லட்சம் வாக்காளர்கள்
சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.;
22.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.01.2024) வெளியிட்டார்கள்.
பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 01.01.2024-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 27.10.2023 முதல் 12.01.2024 வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த 04.11.2023, 05.11.2023 மற்றும் 25.11.2023, 26.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 09.12.2023 வரை படிவங்கள் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 81. கெங்கவல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,09,614 பேரும், பெண்கள் 1,15,689 பேரும், இதரர் 9 பேரும் என மொத்தம் 2,25,312 பேரும், 82.ஆத்தூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,14,932 பேரும், பெண்கள் 1,21,961 பேரும், இதரர் 17 பேரும் என மொத்தம் 2,36,910 பேரும், 83.ஏற்காடு (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,36,803 பேரும், பெண்கள் 1,42,846 பேரும், இதரர் 15 பேரும் என மொத்தம் 2,79,664 பேரும், 84. ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,50,291 பேரும், பெண்கள் 1,43,296 பேரும், இதரர் 10 பேரும் என மொத்தம் 2,93,597 பேரும், 85. மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,36,616 பேரும், பெண்கள் 1,33,274 பேரும், இதரர் 17 பேரும் என மொத்தம் 2,69,907 பேரும், 86. எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,43,346 பேரும், பெண்கள் 1,39,524 பேரும், இதரர் 22 பேரும் என மொத்தம் 2,82,892 பேரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், 87.சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,34,998 பேரும், பெண்கள் 1,32,400 பேரும், இதரர் 20 பேரும் என மொத்தம் 2,67,418 பேரும், 88.சேலம் (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,48,446 பேரும், பெண்கள் 1,49,831 பேரும், இதரர் 70 பேரும் என மொத்தம் 2,98,347 பேரும், 89.சேலம் (வடக்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,30,442 பேரும், பெண்கள் 1,37,236 பேரும், இதரர் 44 பேரும் என மொத்தம் 2,67,722 பேரும், 90. சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,22,202 பேரும், பெண்கள் 1,27,669 பேரும், இதரர் 53 பேரும் என மொத்தம் 2,49,924 பேரும், 91. வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,28,609 பேரும், பெண்கள் 1,27,798 பேரும், இதரர் 22 பேரும் என மொத்தம் 2,56,429 பேரும் ஆக மொத்தம் தற்போது சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14,56,299 பேரும், பெண்கள் 14,71,524 பேரும், இதரர் 299 பேரும் ஆக மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற்ற சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 69,546 வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டும், 34,033 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டும், 18-19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 53,391 எண்ணிக்கையிலும் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் மூலம் voters.eci.gov.in என்ற முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.