சேலம் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சேலம் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.;
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் சங்கர் இன்று (26.12.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் தரமாகவும், குறிப்பிட்ட காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதை உறுதிசெய்திடும் வகையிலும் அலுவலர்களால் நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சேலம் மாவட்டம், சேலத்தாம்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.42.18 கோடி மதிப்பீட்டில் 496 குடியிருப்புகளுக்குக் கட்டப்பட்டுவரும் கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தாரமங்கலம் நகராட்சி, சின்னக்கவுண்டம்பட்டியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.1.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமானப் பணிகளும், திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறித்தும், சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், செலவடை ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், சூரப்பள்ளி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.56.43 இலட்சம் மதிப்பீட்டில் கட்டம்பட்டி முதல் தாசனூர் வரை சாலைகள் மேம்படுத்தும் பணிகளையும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சின்னக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.28 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானப் பணிகளையும், கோட்டமேடு பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் துணை சுகாதார மையமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், வேளாண்மை வணிகத்துறையின் சார்பில் நாரியம்பட்டியில் ரூ.34 இலட்சம் மதிப்பில் உலர்களம் அமைக்கும் பணிகளையும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், பெரியசோரகையில் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.