84 விபத்து வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு கண்ட மக்கள் நீதிமன்றம்
84 விபத்து வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு கண்ட மக்கள் நீதிமன்றம்;
சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நேற்று மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம். உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன் கீழ் இதை அவர்கள் நடைமுறைப்படுத்த முடியும்.
தமிழகம் முழுக்க இதுபோன்ற மக்கள் நீதிமன்ற செயல்முறைகள் நல்ல படியாக நடந்து பல வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணப்படுகின்றன. அந்த வகையில் சேலத்தில் நடைபெற்ற மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையிலான மக்கள் நீதிமன்றத்தில் 84 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டுள்ளது.
சிறப்பு மாவட்ட நீதிபதி தாண்டவன் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில் மாவட்டம் முழுக்க இருந்தும் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் தங்கராஜ் வரவேற்று பேசினார். மாவட்டம் முழுவதும் 6 அமர்வுகளில் மொத்தம் 228 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் ரு.4 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 221 தீர்வு தொகையாக பெறப்பட்டது.