உலக செவிலியர் தினம்; சேலத்தில் நைட்டிங்கேல் சிலைக்கு மாலை அணிவித்த செவிலியர்
Salem News,Salem News Today- உலக செவிலியர் தினமான நேற்று, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நைட்டிங்கேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Salem News,Salem News Today- உலகம் முழுவதும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தன்னலம் பாராமல் பொது நலம் மற்றும் சேவை மனப்பான்மையுடன் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12-ம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும், உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று உலக செவிலியர் தினம், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
மருத்துவத்துறையில் செவிலியர் செய்யும் சேவை மகத்தானது. உறவுகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் வரும்போது அருகில் இருந்து கவனிக்கவும், அக்கறை காட்டவும், பராமரித்து பாதுகாக்கவும் மனமற்றவர்களாக மனிதர்கள் மாறிக்கொண்டு இருக்கின்றனர். அறிமுகமற்ற மனிதர்களை, தனது உறவுகளை விட உயர்வாக பாவித்து அன்பு காட்டி, பராமரித்து நோய் குணமாக எல்லாவித உதவிகளையும் செய்து, மருத்துவ சேவையாற்றும் செவிலியர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள். அதுவும், இளம் வயது பெண்கள் பலரும், இந்த சேவை மிகுந்த மருத்துவத்துறையில் பணியாற்ற ஆர்வமுடன் முன்வந்து, தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிக்கும் அவர்களது மனப்பான்மை, மதிப்புமிக்கது. அதனால், உயிரை காப்பாற்றும் டாக்டர்களையும், நோயை குணப்படுத்த உதவும் செவிலியர்களையும் கடவுள்களாக ஒப்பிட்டு கூறுகின்றனர். அவர்களது பெருமையை, சேவை மனப்பான்மையை, உன்னதமான அவர்களது பணியை போற்றும் விதமாக, உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நைட்டிங்கேல் சிலைக்கு செவிலியர்கள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும், அரசு மருத்துவமனை டாக்டர்களும், செவிலியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல், மாநகராட்சி பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும் நேற்று உலக செவிலியர் தினத்தையொட்டி கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.