சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மர்ம கார்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மர்ம கார் நின்றதால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மர்ம கார் நின்றதால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள், பொதுமக்கள் என தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக சென்னை பதிவு எண் கொண்ட கார் ஒன்று சந்தேகப்படும்படி கேட்பா ரற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட அலுவலர்கள் சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். அந்த மர்ம காரை சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் சந்தேகப்படும்படி பொருட்கள் ஏதும் இல்லாததால் பதிவு எண் கொண்டு காரின் உரிமையாளர் யார்? என்றும் கலெக்டர் அலுவலகத்திற்குள் எப்போது கொண்டு வரப் பட்டது என்றும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அது சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த நேரு என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், இவர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனம் பழுது ஏற்பட்டதால் வாகனம் இயக்க முடியாத சூழல் இருந்ததாகவும் அதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி விட்டதாகவும், வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வருவதாவும் நேரு தெரிவித்தார். இதை அடுத்து அந்த வாகனத்தை உரிமையாளரிடம் இங்கிருந்து எடுத்துச் செல்லுமாறு போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நின்ற இந்த கார் தொடர்பாக நடத்தப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.