"மதி சிறகுகள்" தொழில் மைய நவீன விளம்பர பதாகையினை தொடங்கிவைத்த ஆட்சியர்
சேலத்தில் "மதி சிறகுகள்" தொழில் மையம் குறித்த நவீன விளம்பர பதாகையினை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்கள்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் மேம்பாட்டிற்கான சேவைகளை வழங்கும் "மதி சிறகுகள்" தொழில் மையம் குறித்த நவீன விளம்பர பதாகையினை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று (04.03.2024) தொடங்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான "வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது" ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் இத்திட்டமானது ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, சங்ககிரி, மற்றும் ஆத்தூர் ஆகிய 7 வட்டாரங்களில் 154 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மதி சிறகுகள் என்ற தொழிற்களுக்கான சேவை மையம் மாவட்ட ஆட்சியரக வளாகம் மற்றும் வீரபாண்டி ஒன்றிய பொது சேவை கட்டிடத்திலும் இயங்கி வருகிறது. இம்மையத்தின் மூலம் மகளிர், இளைஞர்கள், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடர்பாடுகள், தடைகள் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளை வழங்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், ஊரகப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வளர்ச்சிக்குத் தேவையான வணிக மேம்பாட்டு சேவைகளை வழங்கவும், வங்கி கடன், வாழ்வாதார பொருளாதார மேம்பாட்டுடன் தொடர்புடைய அரசு துறையில் உள்ள சேவைகளை பெற்று தருவதற்கும், இத்திட்டம் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவருக்கும் சேவை வழங்குவதற்காக செயல்பட்டு வருகிறது. மேற்காணும் சேவைகளை பெறுவதற்கு இம்மையத்தை அணுகி தொழில் முனைவோர்கள் பயன்பெறலாம்.
இன்றையதினம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் மேம்பாட்டிற்கான சேவைகளை வழங்கும் "மதி சிறகுகள்" தொழில் மையம் குறித்த நவீன விளம்பர பதாகை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்துசெல்லும் பொதுமக்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து அறிந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் விசைத்தறி அமைப்பதற்காக மூன்று பயனாளிகளுக்கு ரூ.12.36 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ், மதி சிறகுகள் தொழில் மைய பணியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிளினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (04.03.2024) நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உ -றுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 343 மனுக்கள் வரப் பெற்றன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 26 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி விண்ணப்பித்த கருங்கல்பட்டியை சார்ந்த மாற்றுத்திறனாளி சண்முகம் மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.9,050/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. மேலும், 10 நபர்களுக்கு கால்தாங்கிகள், செயற்கை அவையங்கள் 3 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களின் மீது விரைந்து தீர்வு காண வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.