சேலம் நகரில் கனரக வாகனங்களுக்கு தடை: மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு
சேலம் நகரில் கனரக வாகனங்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தடை விதித்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.;
சேலம் மாநகருக்குள் காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு அடுத்து மிக முக்கியமான ஒரு நகரமாக சேலம் மாநகரம் விளங்கி வருகிறது. சேலம் நகரம் மாநகரம் கோவை மாநகருக்கு இணையாக வளர்ந்து வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை பெருக்கினால் சேலம் நகருக்குள் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். அடிக்கடி முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனையை தீர்க்க கோவை மாநகருக்குள் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி சேலம் மாநகருக்குள் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7மணி வரையும் லாரி போன்ற கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சேலம் நகருக்குள் அடிக்கடி ஏற்படும் உயிர்பலிவாங்கும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும் என மாநகர வளர்ச்சி அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.