சேலம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.124 கோடி கடனுதவி

சேலம் மாவட்டத்தில் 1,246 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.124.13 கோடி வங்கிக் கடனுதவிகளை ஆட்சியர் வழங்கினார்.;

Update: 2024-09-09 10:59 GMT

சேலம் மாவட்டத்தில் 1,246 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 18,311 உறுப்பினர்களுக்கு ரூ.124.13 கோடி வங்கிக் கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி வழங்கினார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி,  மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் அவர்கள், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  இராஜேந்திரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 1,246 மகளிர் சுய உதவிக் குழுகளை சேர்ந்த 18,311 உறுப்பினர்களுக்கு ரூ.124.13 கோடி வங்கிக் கடனுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அந்தவகையில் இன்றைய தினம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 13,799 குழுக்களும் நகர்ப்புர பகுதிகளில் 7,410 குழுக்களும் ஆக மொத்தம் 2,55,943 மகளிரைக் கொண்ட 21,209 குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் வங்கிக்கடன் இணைப்பு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இன்றைய தினம் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் வாயிலாக 742 ஊரக பகுதியிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.63.72 கோடி வங்கி கடனுதவிகளும், 29 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.18.59 கோடி வங்கி பெருங்கடனுதவிகளும், ஊரக பகுதியிலுள்ள ஓரிட சேவை மையம்

மூலமாக 10 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5.00 இலட்சம் தொழிற்கடனுதவிகளும், ஊரக பகுதியிலுள்ள வட்டார வணிக வள மையக்கடன் 10 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10.00 இலட்சம் தொழில் மேம்பாட்டு கடனுதவிகளும்,

453 நகர்ப்புர மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.36.37 கோடி வங்கி கடனுதவிகளும், 9 நகர்ப்புர பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி ரூ.5.01 கோடி பெருங்கடனுதவிகளும், 5 பயனாளிகளுக்கு சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் தனிநபர் தொழில் மேம்பாட்டு வங்கிக் கடனுதவியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 22 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.19.00 இலட்சம் நுண்நிதி தொழிற்கடனுதவிகளும் மொத்தம் 1,246 மகளிர் சுய உதவிக் குழுகளை சேர்ந்த 18,311 உறுப்பினர்களுக்கு ரூ.124.13 கோடி கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டுமென கேட்டுகொள்ளப்படுகிறது.

முன்னதாக, மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த உற்பத்தி பொருட்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர்  அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்  சதாசிவம், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)  வாணி ஈஸ்வரி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் / செயலாட்சியர்  மீராபாய், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர்  இரவிக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர்  ஜெய கணேஷ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News