சேலம் மாவட்டத்தில் ரூ.1,007 கோடி பயிர் கடன் இலக்கு: விவசாயிகளுக்கு அழைப்பு

நடப்பாண்டில் ரூ.1,007 கோடி கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. விவசாய பெருமக்கள் கூட்டுறவுச் சங்கங்களை அணுகி கடன் பெற்றுக் கொள்ள ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-12-16 07:18 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருமக்கள் கூட்டுறவுச் சங்கங்களை அணுகி தங்களுக்கு தேவையான கடன்களைப் பெற்றுப் பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 204 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 8 பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க 2023-2024ம் ஆண்டுக்கு அரசு நிர்ணயித்த ஆண்டுக் குறியீடு ரூ.1,007 கோடியில் தற்பொழுது 74,124 விவசாயிகளுக்கு ரூ.641.19 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. அரசு நிர்ணயித்த ஆண்டுக் குறியீட்டினை முழுமையாக எய்தும் வகையில் நடவடி உக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்க கே.சி.சி. திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு 2021ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 2023-2024ம் ஆண்டிற்கு ரூ.246 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 25,012 விவசாயிகளுக்கு ரூ.110.58 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன் பெற்ற தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் கடனை முழுவதும் திருப்பி செலுத்துவோருக்கு 7 சதவீத வட்டியினை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களின் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்து, அவர்களுக்கு கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

மேலும், சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களை அணுகி தங்களுக்கு தேவையான கடன்களை பெற்று, தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களின் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  கார்மேகம்  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News