சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்
Salem News Today - சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.;
Salem News Today - சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் 10.05.2023 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளின் மூலம் அத்திட்டங்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 15.02.2023 அன்று சேலம் மாவட்டத்திற்கு வருகைபுரிந்தபோது, பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்கள். குறிப்பாக, வீட்டுமனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் போன்றவை வழங்கிட வேண்டி அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று, 2023-24-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் சேலம் மாவட்டத்திற்கென நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைகள் துறை, பொதுப் பணித்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை போன்ற துறைகள் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைவாக சென்றடையும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா. சிவகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.