தேவூர் அருகே சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
தேவூர் அருகே சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினர்.
சேலம் மாவட்டம், தேவூர் அருகே சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் சரபங்கா நதி டிவிசன் பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், சென்னை உயர்நீதிமன்ற நீ திபதி பாரதசக்கரவர்த்தி, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், சங்ககிரி வட்டாச்சியர், சரபங்கா நதி டிவிசன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோருக்கு வருகிற 11-3-2022 தேதிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுத்த ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்பேரில் இன்று சங்ககிரி வட்டாட்சியர் பானுமதி, மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், சங்ககிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்திற்கு சென்றனர்.
அங்கு சங்கங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி, தேவூர் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலையில் திரளான போலீசார் பாதுகாப்புடன் புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள 1ஏக்கர்10சென்ட் அளவில் உள்ள ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அளவீடு செய்து பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருந்த பைப் லைன் மற்றும் விவசாய கரும்பு பயிர்கள் வழித்தடங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.