கருங்கல்லூர் கிராமத்தில் 393 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கருங்கல்லூர் கிராமத்தில் 393 பயனாளிகளுக்கு ரூ.147 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2023-01-31 15:00 GMT

நலத்திட்ட விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கருங்கல்லூர் கிராமத்தில் இன்று  நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், பொது மக்களிடம் நேரில் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பங்கேற்றார்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள் அனைத்தும் முழுமையாக கிடைத்திடவும், மேலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு ஊராட்சியினை தேர்ந்தெடுத்து அந்த ஊராட்சியில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் அலுவலர்கள் நேரடியாகச் சென்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கான தீர்வுகளை வழங்கி வருகின்றோம். அதன்படி, இன்றைய தினம் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கருங்கல்லூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு முகாம் நடைபெறுகிறது.

கருங்கல்லூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மக்கள் சந்திப்பு முகாமில் கருங்கல்லூர், பனமரத்தூர், காளையனூர், தார்காடு (சுந்தராபுரம்), காந்தி நகர், கருங்கல்லூர் பழைய காலனி, மேட்டுபழையூர், எருதுகாரனூர், கணவாய்காடு, புதுவேலமங்கலம், கவுண்டனூர், செம்பரபுதூர், பெத்தான்காலனி, கவேரிபாளையம், வீரனூர், கோமாளிக்காடு, தார்காடு கீழ்காலனி, தார்காடு மேல்காலனி ஆகிய 18 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம், நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் நேரடியாகச் சென்று, கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இன்றைய தினம் ஒரு நாள் முழுவதும் இங்கு முகாமிடுவதால் அலுவலர்களுக்கு இப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிராம மக்களுக்கு சென்று சேர்கிறதா எனவும் அறிந்துகொண்டு மேலும் முனைப்புடன் பணியாற்ற இம்முகாம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், குடிநீர், சாலை வசதிகள், பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதனை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொள்ளும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நேரடியாக வருகைதந்து மனுக்களாக என்னிடம் வழங்கலாம். அதேபோன்று, விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த தங்களது கோரிக்கைகளை வழங்கி தீர்வு காணலாம்.

இன்றைய தினம் கருங்கல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது அதன் சாத்தியக் கூறுகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, இலவச சலவைப்பெட்டி, ஊட்டச்சத்துப் பெட்டகம் உள்ளிட்ட உதவிகளை 393 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நலத்திட்ட உதவிகளை பெற்றுள்ள பயனாளிகள் இதனை தங்கள் வாழ்வின் முன்னெற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  கார்மேகம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்  மேனகா, மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாச்சலம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர்  இரவிக்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சிங்காரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மேட்டூர் வட்டாட்சியர் முத்துராஜா உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் கொளத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் புவனேஸ்வரி சரவணன், கொளத்தூர் ஒன்றியக்குழுத் துணைத்தலைவர்  மாரப்பன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னப்பன், கருங்கல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழனி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News