கோவில் அருகே தொழுகை இடம் சர்ச்சை

தொழுகை இடம் பிரச்சினை, போலீசார் நடவடிக்கை, மூவருக்கு வழக்கு;

Update: 2025-03-29 09:20 GMT

கோவில் அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கிய சர்ச்சை: மூவர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே அய்யன்காட்டுவளவில் முஸ்லிம்கள் தொழுகைக்கு மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி காடையாம்பட்டி வருவாய்த் துறையினர் அரசு புறம்போக்கில் இடம் தேர்வு செய்து முட்டுக்கல் நட்டனர். ஆனால் கடந்த 26ம் தேதி கருப்பணார் கோவில் விழாவின்போது ஆடு, கோழி பலியிடும் இடம் எனக் கூறி அப்பகுதி மக்களும் ஹிந்து முன்னணியினரும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். தீவட்டிப்பட்டி போலீசார் அப்போது அவர்களை சமாதானப்படுத்தினர். இந்நிலையில், காடையாம்பட்டி தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெய்கணேஷ் நேற்று முன்தினம் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், ஹிந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், மாவட்ட செயலர் மணிகண்டன், யு-டியூப் சேனல் ஆசிரியர் ராஜேஸ்ராவ் ஆகியோர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படி வீடியோ பதிவை யு-டியூப், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார். விசாரித்த போலீசார் மூன்று பேர் மீதும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இதற்கிடையே, ஜமாத் செயலர் கதர் ஷெரீப், கலீல், உறுப்பினர் ஜலால் ஆகியோர் சக நிர்வாகிகளுடன் நேற்று தொழுகைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அங்கு தீவட்டிப்பட்டி போலீசாரும் வருவாய்த் துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜலால் கருத்து தெரிவிக்கையில், "அரசு வழங்கிய இடத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவது குறித்து ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டோம்" என்றார்.

Tags:    

Similar News