சேலம் மாவட்டத்தில் 10.72 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

சேலம் மாவட்டத்தில் 10,71,905 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.118.85 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.;

Update: 2024-01-11 05:07 GMT

சீரங்கபாளையம் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் 10,71,905 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.118.85 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சென்னையில் நேற்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியினைத் முதல்வர் தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  கார்மேகம் தலைமையில், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் சேலம் மாநகராட்சி, சீரங்கபாளையம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாள் மதம், இனம் பாராமல் ஒன்றிணைந்து சுமார் ஒரு வாரம் கொண்டாடக்கூடிய விழாவாகும். இவ்விழாவினை ஒரு குடும்பத்தின் நிகழ்ச்சி என்று தனித்துப் பாராமல், தமிழ்நாடு அரசானது அனைத்து குடும்பங்களுடனும் உறுதுணையாக உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகச் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத் தொகை ரூ.1,000/- வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 1,715 நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 10,70,970 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 935 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என ஆகமொத்தம் சேலம் மாவட்டத்தில் 10,71,905 குடும்பங்களுக்கு ரூ.118.85 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

நாள்தோறும் ஒரு நியாய விலை கடைக்கு 250 நபர்கள் வீதம் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் இன்றைய தினம் தொடங்கி 13.01.2024 வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியில் கூட்டுறவுத் துறை, பொது விநியோகத் திட்டம், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 6 அடிக்கு குறையாத செங்கரும்பு வழங்கும் வகையில் சேலம், பூலாம்பட்டியில் உள்ள சுமார் 215 உழவர்களிடம் நேரடியாக செங்கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உரிய தொகை நேரடியாக உழவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன்மூலம் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளும் பயனடைந்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் நலனுக்காக புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம், பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில்தொடங்க வைக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6 இலட்சம் கோடிக்கு மேல் முதலீடு கிடைத்துள்ளது.

தமிழக முதல்வரால் செயல்படுத்தப்பட்ட "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமானது சேலம் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 06.01.2024 வரை முதற்கட்டமாக 142 முகாம்கள் நடத்தப்பட்டது. மாநிலத்திலேயே இரண்டாவது அதிகபட்சமான முகாம்கள் சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியின் அடிப்படையில் விரைவாக அனைத்து மனுக்களுக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அயலகத் தமிழர் தின விழா நாளைய தினம் சென்னையில் நடைபெறவுள்ளதை மாவட்டத்தில் உள்ள அனைவரும் பார்த்துப் பயன்பெறும் வகையில் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பினைப் பெற்றுக்கொண்டு தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் / செயலாட்சியர் மீராபாய், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் இரவிக்குமார், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலை இணைப் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் பாலமுருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News