400 தொகுதிகளில் அமோக வெற்றி பெறுவோம்... சேலம் பாஜ கூட்டத்தில் பிரதமர் மோடி உற்சாக பேச்சு......
PM Modi Salem Meeting தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் கூட்டம் சேலத்தில் நடந்தது. பாஜ வளர்ச்சியினால் திமுகவினரின் துாக்கம் தொலைந்து போய்விட்டது என்று பேசினார்.
PM Modi Salem Meeting
தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் முதல் கூட்டம் அதுவும் சேலத்தில் என்பதால் தொண்டர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது... இக்கூட்டத்தில் மிக உற்சாகமாக காணப்பட்ட பிரதமர் மோடி இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று பேசினார்.
சேலம் சீலநாய்க்கன்பட்டி பைபாஸ் அருகேயுள்ள கெஜ்ஜல்நாய்க்கன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மேடையில் கொளுத்தும் வெயிலில்தான் இந்த கூட்டமானது நடந்தது. பிறபகல் 1 மணிக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ஜீப்பில் ஏறி கூட்ட மேடைக்கு வந்தார்.
PM Modi Salem Meeting
சேலம் கோட்டை மாரியம்மனை நினைவு படுத்தும் வகையில் வேப்பிலையோடு அம்மன் வேடம் தரித்த பெண்களோடு பிரதமர் நரேந்திர மோடி (கோப்பு படம்)
இக்கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன், உடன் வந்தனர். வழி நெடுகிலும் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் நின்று கொண்டு மோடி, மோடி என கூக்குரல் எழுப்பியதோடு மலர் துாவி அவரை வரவேற்றனர்.
பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களான பாமக ராமதாஸ், அன்புமணி,தமாகா வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், ஐஜேகே பாரிவேந்தர், அமமுக டிடிவி தினகரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஜான்பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தேவநாதன், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா , நடிகை குஷ்பூ உள்ளிட்டவர்களுக்கு வணக்கம் தெரிவித்து பின் மேடையில் அமர்ந்தார்.
பின் கூட்டத்தில் பேசிய மோடி, சேலத்தில் அமைந்துள்ள கோட்டைமாரியம்மனின் இருப்பிடத்தில் பேசுவதில் மிகப் பெருமை அடைகிறேன். தமிழகத்தில் பாஜவின் வளர்ச்சியைக் கண்டு இந்தியாவே உற்று நோக்கி வருகிறது. இதே பேச்சாக உள்ளது. நேற்று கோவையில் ஜனசமுத்திரத்தில் நீந்தி வந்தேன். சேலத்தில் உங்களுடைய அன்பில் நனைந்துகொண்டிருக்கிறேன். பாஜவுக்கு சமீப காலமாக கிடைக்கும் ஆதரவால் திமுகவினர் துாக்கம் போயே போச்சு என்றார்.
PM Modi Salem Meeting
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது பாமக... மோடிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி ஆகியோர். (கோப்பு படம்)
இந்த தேர்தலைப் பொறுத்தவரை நம் கூட்டணியானது 400 தொகுதிகளுக்கு மேல் அமோக வெற்றியைப் பெறுவோம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். வளர்ச்சியான தமிழகம், இந்தியாவின் வளர்ச்சிக்கு, நவீன கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம், தன்னிறைவான பாரதம் ஆகியவைகள் கிடைக்க உங்களுடைய ஒவ்வொருவரின் ஓட்டும் ஏப். 19 ந்தேதியன்று பாஜவுக்கு அளிக்க வேண்டும். 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும்.
தமிழகத்தில் நாம் வலுவான கூட்டணி அமைக்க பாமக துணையாக வந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. ராமதாஸ் அன்புமணியின் ஆற்றல் ,தொலை நோக்கு நமக்கு அதிக உத்வேகத்தினை அளிப்பதாக அமைந்துள்ளது.
ஹிந்து மதமானது எந்த மதத்தையும் தொந்தரவு செய்வது கிடையாது. ஆனால் இந்தியா கூட்டணி இந்து மதத்தினை தொடர்ந்து அவமதித்து வருவதோடு, கேலியும் கிண்டலும் செய்ய தவறுவதில்லை. தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட செங்கோலை லோக்சபா வளாகத்தில் நிறுவ அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
சக்தியை அழிக்கப்போகிறவர்கள் அழியப்போகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பாக பல திட்டங்களை பாஜ அறிவித்து வருகிறது. இன்னும் தொடரும்... மேலும் பெண்கள் பாஜவின் கவசமாக உள்ளனர். பெண்களைத் தேடி இன்னும் பல திட்டங்கள் வர உள்ளன இது மோடியின் உத்தரவாதம் ஆகும்.
நாணயத்தின் இரு பக்கம் போல் திமுகவும் காங்கிரசும் தொடர்ந்து கை கோர்த்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியை விட்டு அகன்ற பின்தான் 5 ஜி வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சியான 5 ஜியைஅவர்கள் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என நினைத்து செயல்பட்டு வருகின்றனர்.
இதுவரை திமுக செய்த ஊழல் அனைத்தையும் ஒரே நாளில் சொல்லிவிட முடியாது. 2ஜி ஊழல் உலக அளவில் புகழ் வாய்ந்து விட்டது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல கோடிகளைத் தர மத்திய அரசு தயாராக இருந்தாலும் அதனை கொள்ளையடிக்கத்தான் திமுக தயாராக உள்ளது.
மக்கள் தலைவர் மூப்பனாரைப் பிரதமராக்காமல் தடுத்து நிறுத்தியதும் இவர்கள் தான். தமிழகத்தின் கருப்பு காந்தியான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் அற்புதமான திட்டம் ஆகும். அவரது வழிகாட்ல் எனக்கு பேருதவியாக உள்ளது.
5 ஆண்டுகளில் புதிய திட்டங்கள்
பாஜ பல இலக்குகளை நிர்ணயித்து வளர்ச்சியை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் பல ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலைகள், 20 க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லுாரிகள், ஐஐடி ஆகியவை துவங்கப்பட்டு தொழில்துறையானது முன்னேற்றத்தினைக் கண்டுள்ளது.
மேலும் நாட்டின் இரண்டு பாதுகாப்பு தடங்களில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது. மிகப்பெரிய 7ஜவுளிப்பூங்காவில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. இரும்பு உற்பத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததில் சேலத்தில் உருக்கு தொழில் பெரிதும் பயன்படப் போகிறது.
வரக்கூடிய 5ஆண்டுகளில் தமிழகம் தன்னிறைவு பெற வளர்ச்சியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடிய காலமாக இது இருக்கும். உலகின் தொன்மையான மொழி தமிழ் என நெஞ்சை நிமிர்த்தில் சொல்கிறேன். அது தெரிந்தும் என்னால் அம்மொழியைப் பேச முடியவில்லை இருந்தாலும் நமோ ஆப் மூலம் பேசி வருகிறேன் அதைக்கேட்டு உங்களுடைய கருத்துகளைத் தெரிவியுங்கள் என்று பேசினார்.