காவிரிக்கரையில் வரும் 8ம் தேதி ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி துவக்கம்
காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வரும் 8ம் தேதி தொடங்க உள்ளது.
காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி 08.09.2024 அன்று தொடங்க உள்ளதையொட்டி இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் 30.08.2024 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின் ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி சேலம் மாவட்டம், மேட்டூரில் வரும் 08.09.2024 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமல் காலத்துக்கும் பயன்தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி 2024-ஆனது ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை வருகின்ற 08.09.2024 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.
அதனடிப்படையில், செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க பனை விதைகள் சேகரிப்பும். அவற்றை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்க இருக்கிறது. இதேபோன்று, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி தொடர இருக்கிறது.
இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுசூழல் அமைப்புகள் மற்றும் ஒரு இலட்சம் தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள் தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று பனை விதைகளை நட உள்ளனர். இதில், பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள். சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் Udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இதில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
எனவே, காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியில் சேலம் மாவட்ட மாணவ, மாணவியர்கள், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மகத்தான இப்பணியில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் வாணி ஈஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, இணை இயக்குநர் (வேளாண்மை) சிங்காரம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, இன்றையதினம் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், சாம்பள்ளி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டப்பணியாளர்களைக்கொண்டு பனைவிதைகள் நடும் பணிக்கான ஒத்திகை நடைபெற்றது. ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜவேலு, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் பனை விதை நடவு முறை குறித்து விளக்கமளித்தனர். இதில் சுமார் 100 பணியாளர்கள் கலந்து கொண்டு 30 நிமிடங்களில் 100 குழிகளைத் தோண்டி பனை விதைகளை நட்டு ஒத்திகையில் ஈடுபட்டனர்.