சேலம் மாவட்டத்தில் 26ம் தேதி "மக்களுடன் முதல்வர்" முகாம் நடைபெறும் இடங்கள்

"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 7வது நாளான 267.12.2023 அன்று 9 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

Update: 2023-12-24 05:31 GMT

பைல் படம்

"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 7வது நாளான வருகின்ற 26.12.2023 அன்று 9 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழக முதல்வரின் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற முன்னெடுப்பின் நீட்சியாக, அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் "மக்களுடன் முதல்வர்" "இல்லம் தேடி சேவை"என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீர்மிகு இத்திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சிறப்புடன் செயற்படுத்திட 18.12.2023 முதல் 06.01.2024 வரை 16 வேலை நாட்களில் 142 முகாம்களை நடத்த 142 உரிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, சீரிய முறையில் நடத்திட முகாம் கண்காணிப்பு அலுவலர்கள் (NODAL OFFICERS) மற்றும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் (INCHARGE OFFICERS) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமில் செயல்படும் இ-சேவை மையங்களில் வழக்கமாக பெறப்படும் சேவைக்கட்டணத்தில் 50% மட்டும் பெற்றுக்கொள்ளப்படும். இந்த முகாமானது முற்பகல் 10.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.00 மணி வரை செயல்படும். முகாமின் போது பெறப்படும் மனுக்களின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் 7வது நாளான 26.12.2023 அன்று சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் வார்டு 21 பகுதிக்குட்பட்டவர்களுக்கு அரியாகவுண்டம்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், அஸ்தம்பட்டி வார்டு 13 பகுதிக்குட்பட்டவர்களுக்கு CSI பாலிடெக்னிக் கல்லூரியிலும், அம்மாபேட்டை வார்டு 35 பகுதிக்குட்பட்டவர்களுக்கு பண்டரிநாதன் மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி வார்டு 51 பகுதிக்குட்பட்டவர்களுக்கு நெத்திமேடு மாணிக்கம்மாள் திருமண மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

மேலும், எடப்பாடி நகராட்சி, எடப்பாடி வார்டு 23, 24, 25, 26, 27 ஆகிய பகுதிகளுக்குட்பட்டவர்களுக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நரசிங்கபுரம் நகராட்சி, நரசிங்கபுரம் வார்டு 4, 5, 6, 7, 8 ஆகிய பகுதிகளுக்குட்பட்டவர்களுக்கு விநாயகபுரம் ஸ்ரீ வாரி மினி மஹாலிலும், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிப் பகுதிக்குட்பட்டவர்களுக்கு செங்குந்தர் திருமண மண்டபத்திலும், கீரிப்பட்டி வார்டு 12 பகுதிக்குட்பட்டவர்களுக்கு கீரிப்பட்டி சமுதாயக் கூடத்திலும், ஆண்டிப்பட்டி கிராம ஊராட்சி பகுதிக்குட்பட்டவர்களுக்கு ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திலும் என மொத்தம் 9 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் 142 இடங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, உரிய விளம்பரம் நகராட்சி நிருவாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையால் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாட்களை அறிந்து முகாமில் ஒருங்கிணைக்கப்படும் 13 துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பெற தமிழ்நாடு அரசின் செம்மை மிக்க இத்திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News