பட்டாசுக் கடைகளில் கூடுதலாக பட்டாசு விற்பனைக்கு வைத்தால் அனுமதி ரத்து

சேலம் மாவட்ட பட்டாசுக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தால் கடையின் அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-10-08 12:17 GMT

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் பட்டாசுக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தால் கடையின் அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கார்மேகம் தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (08.10.2023) ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நகர்புறங்களில் 170 பட்டாசு கடைகளுக்கும், ஊரகப் பகுதிகளில் 470 பட்டாசு கடைகளுக்கும் இதுவரை தற்காலிக அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக் கடைகள் அமைப்பதைப் போன்று சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குடியிருப்புகள் அதிகம் இல்லாத பகுதிகள், பணியிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் இல்லாத திறந்தவெளி மைதானங்களில் பாதுகாப்பு நலன்கருதி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கான திறந்த வெளி இடங்கள் முடிவு செய்யப்பட்டு அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப் படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பட்டாசுக் கடைகளுக்கான அனுமதியினை வழங்கும்போதே விபத்துக்கள் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பட்டாசுக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலோ, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த பட்டாசுக் கடையின் அனுமதியை இரத்து செய்யவும் உ —த்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு குடோன்கள் அனுமதி பெற்று செயல்பட்டுவந்தால் அவற்றையும் பாதுகாப்பு நலன் கருதி குடியிருப்பு இல்லாத இடங்களுக்கு, இடமாற்றம் செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதன் அவசியம் குறித்தும் அதிகமான பட்டாசு ஒலியால் முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு இடையூறு இல்லாத வகையிலும், பறவை, விலங்கினங்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையிலும், காற்றில் கார்பன் அதிகளவில் கலந்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பசுமை பட்டாசுகள் விற்பனை செய்வதை ஊக்குவிப்பதுடன், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இவ்வாய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன்,வருவாய் அலுவலர் மேனகா, மாநகர காவல் துணை ஆணையர்மதிவாணன்,அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட தொடர்புடைய பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News