ஆத்தூர் அருகே மல்லியக்கரை ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்
Salem News Today- ஆத்தூர் அருகே மல்லியக்கரை ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
Salem News Today- சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மல்லியக்கரை ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வர் பொதுமக்களுக்கான திட்டங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் முழுமையாக சென்றடைகிறதா என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகாண வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
அந்த வகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மல்லியக்கரை ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. இந்த மல்லியக்கரை கிராமத்தில் 1,479 வீடுகள் இருக்கின்றன. இங்கு சுமார் 4,500 எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளன. இம்மக்கள் சந்திப்பு முகாமில் மல்லியக்கரை ஊராட்சிக்குட்பட்ட மல்லியகரை, பெரியார் நகர், ஜெனிதா நகர், கும்பல் கொட்டாய், கருத்தராஜா பாளையம், கருத்தராஜா பாளையம் ஆதிதிராவிடர் காலனி மற்றும் ஒட்டர் காலனி ஆகிய 7குக்கிராமங்களுக்கு மாவட்ட நிலையிலான அலுவலர்கள் பல்வேறு குழுக்களாக நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து அதன் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலம் ஒரு வாரத்தில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் அரசு அலுவலர்களைக் கொண்டு நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும், ஆண்டுதோறும் அனைத்து வருவாய் வட்டங்களிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடத்தப்பட்டு அதிலும் மனுக்கள் பெறப்பட்டு விரைவாக தீர்வு காணப்பட்டு வருகின்றன.
இன்றைய மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் 113 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி வரை சென்று சேர்வதை உறுதி செய்திடும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மல்லியக்கரை ஊராட்சியில் நடப்பு நிதியாண்டில் ரூ2.73 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வட்டார ஊராட்சியின் பொது நிதி சார்பில் ரூ. 2.64 இலட்சம் மதிப்பிலான பணிகளும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.4.20 இலட்சம் மதிப்பிலான 3 பணிகளும், 15வது நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சி சார்பில் ரூ.5.50 இலட்சம் மதிப்பிலான பணிகளும், சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.78 இலட்சம் மதிப்பிலான பணிகளும் மற்றும் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.2.70 இலட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் குறித்து செயல் விளக்கக் காட்சியின் மூலம் விளக்கப்பட்டது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல், குழந்தைகளுக்கான தடுப்பூசியினை உரிய கால இடைவெளிக்குள் போட்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளைச் சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களிடம் குழந்தைகளை அழைத்துச் சென்று எடை மற்றும் உயரம் உள்ளிட்டவைகளை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த மக்கள் தொடர்பு முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 4 புதிய குடும்ப அட்டைகளும், நத்தம் பட்டா மாறுதல் 5 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் 2 பயனாளிகளுக்கும், உட்பிரிவு தனிப்பட்டா 14 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும், தாட்கோ மூலம் 5 பயனாளிகளுக்கு வங்கிக்கடனுதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் பரப்பு விரிவாக்கம் 4 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
மேலும், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் நுண் பாசனத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தெளிப்பு நீர் கருவிகளும், சுகாதாரத் துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண நிதியுதவிகளும் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.44.25 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகள் மென்மேலும் தங்கள் வாழ்வில் முன்னேற இந்நலத்திட்ட உதவிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் மல்லியக்கரை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மைலி அவர்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி கேட்டு மிகச் சுருக்கமாகவும், அழகாகவும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பேசியதற்கு மாவட்ட ஆட்சியர் அம்மூதாட்டிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன், சாலை வசதி அமைத்துத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.