சேலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணப்பலன்கள் வழங்கல்

Salem News Today: சேலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணப்பலன்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

Update: 2023-05-30 14:01 GMT

சேலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணப்பலன்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். 

Salem News Today:  சேலம், ஜான்சன்பேட்டை பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.82.22 கோடி மதிப்பிலான பணப்பலன்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

பின்னர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020ம் ஆண்டு மே முதல் நவம்பர் வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 8,361 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட ரூ.1,582.44 கோடி மதிப்பிலான பணப்பலன்களை வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, சேலம் மண்டலப் போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக டிசம்பர் மாதத்தில் கடந்த 2020ம் ஆண்டு மே முதல் 2021ம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.37.49 கோடி மதிப்பிலான பணப்பலன்கள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.43.77 கோடி மதிப்பிலான பணப்பலன்கள் என மொத்தம் ரூ.81.26 கோடி மதிப்பிலான ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, இன்று சேலம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 82.22 கோடி மதிப்பிலான வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை மற்றும் விடுப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நீண்ட நேரம் பேருந்துகளில் பணி செய்வதால் அவர்கள் ஓய்வெடுக்க சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக, அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள பணியாளர்கள் ஓய்வு அறைகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படும் என்று கடந்த 29.03.2023 அன்று 2023– 24-ஆம் ஆண்டின் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையின்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, சேலம் போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக, ஒருங்கிணைந்த ஜான்சன்பேட்டை பணிமனை வளாகத்தில், 798 சதுர அடி பரப்பில் உள்ள பணியாளர்களுக்கான ஓய்வறை குளிரூட்டப்பட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயார்படுத்தப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வறையினை தோராயமாக 80 பணியாளர்கள் பயன்படுத்தலாம். இதன்மூலம், ஜான்சன்பேட்டை கிளை 1 பணிமனையில் 53 பேருந்துகளின் 251 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும், ஜான்சன்பேட்டை கிளை 2 பணிமனையில் 58 பேருந்துகளின் 299 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் பயனடைகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News