தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி பலி
சேலம் ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி பலி
சேலம் உம்பிலிக்கம்பட்டியைப் பூர்விகமாக கொண்டவர் கோகிலா. இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வேலங்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் மதுமிதா என்கிற மகளும், 3 மாத கைக்குழந்தையான மகனும் இருக்கிறார்கள்.
குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆன நிலையில் தாய் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார் கோகிலா. உடன் தன்னுடைய 4 வயது மகளையும் அவரது பாட்டி வீட்டிலேயே விட்டுச் சென்றிருக்கிறார் கோவிந்தராஜ். கைக்குழந்தையை மகள் கவனித்து வருவதால். தன் பேத்தியை தானே குளிப்பாட்டி, உடை உடுத்தி பராமரித்து வருகிறார் பாட்டி.
இந்நிலையின் சம்பவத்தன்று காலையிலும் வழக்கம்போல மதுமிதாவைக் குளிப்பாட்டிவிட்டு உடை எடுத்து அணிய வீட்டுக்குள் சென்றிருக்கிறார் பாட்டி. கோகிலாவும் குழந்தையை சீராட்டி தூங்க வைக்கச் சென்றிருந்ததால் மகளை கவனிக்கவில்லை போலிருக்கிறது.
ஆடையை எடுத்துக் கொண்டு திரும்பி வந்த பாட்டிக்கு அதிர்ச்சி, முன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பேத்தியைக் காணவில்லை. சரி இங்கேதான் எங்கும் இருப்பாள் என்று நினைத்து தெரு முழுக்க தேடியும் மதுமிதா கிடைக்கவில்லை.
இந்நிலையில், கொஞ்சம் தொலைவில் உள்ள தண்ணீர் தொட்டி பகுதியில் மதுமிதா தத்தளித்திக் கொண்டிருந்தது பாட்டிக்கு தெரியவந்தது. இதனால் பேரதிர்ச்சி அடைந்த பாட்டி, உடனே அக்கம்பக்கத்தினரை கூக்குரலிட்டு அழைத்தார். அருகாமையிலிருக்கும் சிலர் ஓடி வந்து சிறுமியைத் தூக்கினர். துரதிஷ்டவசமாக மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்துவிட்டாள் சிறுமி. இதனைப் பார்த்த அவளது அம்மா கதறி அழுதது அருகிலிருப்பவர்களை நொறுங்கச் செய்தது. 4 வயது சிறுமி மரணமடைந்த நிகழ்வால் அந்த பகுதியே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.
இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சிறுமி இறந்த பகுதிக்கு வந்த தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அங்குள்ள முருகன் கோவில் கட்டுமான பணிக்காக தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்ததும் திறந்த வெளியில் வைக்கப்பட்ட அந்த தொட்டியில் பல நாள்களாக தண்ணீர் தேங்கியிருப்பதும் தெரியவந்தது. கோவில் கட்டுமான பணியும் கிடப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
திறந்த வெளியில் மூடப்படாமல் இருந்த தொட்டியில் தவறி விழுந்து எந்த பாவமும் அறியாத குழந்தை மரணமடைந்திருப்பது அந்த பகுதி மக்களின் கோபத்தைத் தூண்டியது. இதனால் சிறுமியின் உறவினர்களோடு அக்கம்பக்கம் வசிப்பவர்களும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரேத பரிசோதனைக்கு சிறுமியின் உடலை எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் அதன்பிறகு காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி, சிறுமியின் தந்தை சம்மதத்துடன் அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.